பிசிசிஐ தலைவராக தற்போது பொறுப்புவகிக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் காலக்கட்டத்தில் இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திகொண்ட ஜாகிர் கான், யுவராஜ் சிங், சேவாக், முகமது கைஃப் போன்ற இளம் வீரர்கள் பின்நாட்களில் சிறந்த வீரர்களாக மாறினர். அந்த வரிசையில் ஆல்ரவுண்டர் இர்பான் பதானுக்கு என்றும் தனி இடம் உண்டு.
இர்பான் பதானின் அறிமுகம்:
இடதுகை வேகப்பந்துவீச்சாளர், இடதுகை பேட்ஸ்மேன் என ஆல்ரவுண்டரான இவர் 2003 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்மூலம் தனது 17வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். பின் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் மூலம், ஒருநாள் போட்டியிலும் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
ஆல்ரவுண்டராக வலம் வந்த இர்பான் பதான்:
குறிப்பாக, 2004இல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பவுலிங்கிலும், 2005இல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மூன்றாவது வரிசையில் களமிறங்கி அதிரடியாக 83 ரன்கள் அடித்து தான் ஒரு ஆல்ரவுண்டர் என்பதையும் நிரூபித்தார். இவ்வாறு தனது ஸ்விங் பவுலிங்கினாலும், அதிரடி பேட்டிங்கினாலும் இந்திய அணியின் மேட்ச் வின்னராக வலம்வந்தார்.
இர்பான் பதானின் விக்கெட்டுகள்:
இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளும், 120 ஒருநாள் போட்டிகளில் 173 விக்கெட்டுகளும், 24 சர்வதேச டி20 போட்டிகளில் 28 விக்கெட்டுகளும் வீழ்த்திய இவர் 2012இல் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இறுதியாக விளையாடினார்.
இர்பான் பதானின் ஓய்வு அறிவிப்பு:
பவுலிங், பேட்டிங் என ஆல்ரவுண்டராக அசத்திய இர்பான் பதான் பின்நாட்களில் இந்திய அணியில் அடுத்த கபில்தேவாக வலம்வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகி ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இர்பான் பதான்.
டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக்:
இர்பான் பதான் என்றாலே 2006ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சாதனைப் படைத்ததுதான் நம் நினைவுக்கு வரும். அவரது அபாரமான ஸ்விங் பந்துவீச்சில் சல்மான் பட், வாக்கார் யூனிஸ், முகமது யூசுஃப் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
டி20 உலகக் கோப்பை நாயகன்:
2007இல் இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர் இர்பான் பதான். நான்கு ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே வழங்கி சோயப் மாலிக், ஆஃப்ரிடி, யாசிர் அராஃபத் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
அதேபோல் ஆஸ்திரேலியாவில் 2008இல் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி வரலாற்று வெற்றிபெற முக்கிய பங்காற்றினார். இர்பான் பதான் தனது சகோதரர் யூசப் பதானுடன் சேர்ந்து செய்த மேஜிக்குகளும் உள்ளன. 90களில் பிறந்து கிரிக்கெட் பார்க்கத் தொடங்கிய பெரும்பாலான இந்திய ரசிகர்களின் நேரங்களை தனது அசத்தலான ஆட்டத்திறனால் தனதாக்கிக் கொண்டவர் இர்பான் பதான். அவரை மிஸ் செய்யும் ரசிகர்களும் இங்கு உள்ளனர்.
தாதாவின் கேப்டன்ஷிப்பில் நுழைந்த அனைத்து வீரர்களும் ஓய்வு பெற்றுவிட்டனர். தோனி, தினேஷ் கார்த்திக்தைத் தவிர. தற்போது வர்ணனையாளராகவும், ஜம்மு காஷ்மீரின் 16 வயது முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராகவும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்துவருகிறார் இர்பான் பதான்.
இதையும் படிங்க: தோனியின் ஓய்வு முடிவு அனைவருக்கும் சர்ப்ரைஸாக இருக்கும் - இர்பான் பதான்