சர்வதேச கிரிக்கெட்டில் அஃப்ரிடி, இம்ரான் கான், பீட்டர்சன் எனப் பல வீரர்கள் ஓய்விலிருந்து மீண்டும் அவர்களது அணிகளுக்குத் திரும்பியுள்ளனர். இதேபோன்று சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இர்ஃபான் பதானும், ஓய்விலிருந்து வெளியே வரத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானும், ரெய்னாவும் இன்ஸ்டாகிராமில் உரையாடினர். அப்போது இர்ஃபான் பதான், ''வீரர்கள் தேர்வில் மற்ற நாடுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. மைக் ஹசி போன்ற வீரர்கள் 29 வயதில் அறிமுகமாகி தங்கள் திறமையை வெளிப்படுத்தி புகழடைகின்றனர்.
ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு என்னை முழுவதுமாக ஓரம் கட்டியது. வீரர்கள் அனைவரும் 30 வயதில் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கியத் தருணத்தில் இருப்பர். ஆனால் இந்திய அணி 30 வயதிலேயே என்னை ஓரம் கட்டியது.
ஒவ்வொரு வீரரிடமிருந்தும் அணிக்கு என்ன தேவை என்பதைத் தேர்வாளர்கள் சரியாக அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அதற்கேற்றாற்போல் வீரர்கள் தயாராவார்கள்.
இப்போதுகூட தேர்வாளர்கள் என்னைத் தொடர்புகொண்டு, உங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் தருகிறோம். அதற்குள் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கூறினால், நிச்சயம் இந்திய அணிக்கு ஆடுவதற்காகத் தயாராவேன். ஆனால் இங்கே தொடர்புகொண்டு பேசுவதற்கு யார் தயாராக இருக்கிறார்கள்?'' எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த ரெய்னா, ''நாம் இன்னும் இளமையாகவும், உடல்தகுதியுடனும் இருக்கிறோம். அதேபோல் கிரிக்கெட் ஆடுவதற்கான உத்வேகத்தையும் வைத்துள்ளோம். வாய்ப்புக் கிடைக்கும்போது நம் அனைவராலும் நிச்சயம் சிறப்பாக ஆட முடியும். பல்வேறு வீரர்களுக்கும் இதே நிலைதான் நீடிக்கிறது'' என்றார்.
![ரெய்னா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/suresh3_0205newsroom_1588416598_998.jpg)
இந்த இரு வீரர்களின் உரையாடல்கள் ரசிகர்களிடையே லேசாக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அணியில் இருந்த தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ் போன்ற வீரர்களுக்குச் சரியான வாய்ப்பு வழங்கப்படாமலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தற்போதைய இந்திய அணியில் முழுமையான ஃபீல்டர்கள் இல்லை - கைஃப்!