கரோனா வைரஸால் இந்த ஆண்டு நடக்கயிருந்த ஐபிஎல் தொடர் கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இரு நாள்களுக்கு முன்பாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சிவா, ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்த பிசிசிஐ முன்வர வேண்டும் எனப் பேசினார். ஏனென்றால் இலங்கையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கின்றன. இந்தியாவோடு ஒப்பிடுகையில் இலங்கை விரைவாகவே கரோனாவிலிருந்து மீளும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனவே ஐபிஎல் தொடர் இலங்கையில் நடக்குமா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த பிசிசிஐ அலுவலர், ''உலகமே வீட்டிற்குள் முடங்கி இருக்கும்போது ஐபிஎல் தொடர் நடத்துவது பற்றி பேசுவது சரியாக இருக்காது. ஐபிஎல் தொடரை நடத்துவது பற்றி இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பாக எங்களுடன் இதுவரை யாரும் ஆலோசனை மேற்கொள்ளவில்லை. பிசிசிஐ முடிந்தவரை ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த தான் திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்துவதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கணிசமான லாபம் கிடைக்கும். ஆனால் இப்போது ஐபிஎல் பற்றி எதுவும் கூறமுடியாது. ஜூலை மாதத்தில் நடக்கவுள்ள இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் நிச்சயம் நடக்கும்'' என்றார்.
இந்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் அல்லது அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐபிஎல் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்திக்கொள்ளுங்கள் - இலங்கை கிரிக்கெட் வாரியம்!