இந்தியாவில் டி20 கிரிக்கெட் திருவிழாவாகப் பார்க்கப்படும் ஐபிஎல் டி20 தொடர் 2008இல் அறிமுகமானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவரும் இந்த தொடரின் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்துமுடிந்துள்ளன. 13ஆவது சீசன் கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்தது.
இந்த நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றால், ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் கரோனாவின் தாக்கம் குறையாததால் ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தத் தொடரைத் தங்களது நாட்டில் வேண்டுமானால் நடத்திக்கொள்ளுங்கள் என இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது. இது ஒருபக்கம் இருக்க, இந்தத் தொடர் செப்டம்பர் அல்லது அக்டோபரில் ரசிகர்களின்றி காலி மைதானங்களில் நடைபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடர் ரத்தானால் பிசிசிஐக்கு பெரியளவில் இழப்பு நேரிடும் என அதன் பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒருவேளை ஐபிஎல் தொடர் நடைபெறவில்லை என்றால் பிசிசிஐக்கு 4,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படக்கூடும். மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஆவலாக இருக்கிறோம். ஆனால் இந்தச் சூழலில் அரசாங்கத்தின் உத்தரவுகளையும் ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும். நடப்பு ஆண்டில் ஐபிஎல் தொடரை நடத்த முடியாமா என்பது பற்றி இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது.
கடந்த மார்ச் நடைபெறவிருந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ரத்தானது. ஆனால் இது ஐபிஎல் தொடர். பிசிசிஐக்கு பெருமளவு நிதி ஐபிஎல் தொடரிலிருந்துதான் கிடைத்துவருகிறது. எத்தனைப் போட்டிகளை இழந்தோம் என்பதை உறுதிசெய்தால் மட்டுமே, சரியான வருவாய் இழப்பைக் கண்டுபிடிக்க முடியும்" என்றார்.
இதையும் படிங்க: குடும்பத்தினருடன் லூட்டி அடிக்கும் டேவிட் வார்னர்