இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 14ஆவது சீசன் இந்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இத்தொடருக்கான மினி வீரர்கள் ஏலம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறுமென பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகளும் தங்கள் அணியில் உள்ள சில வீரர்களை வெளியேற்றி, புதிய வீரர்களை வாங்க திட்டமிட்டிருந்தன. ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகக்குழு இன்று (ஜன.27) தெரிவித்துள்ளது.
இந்த தகவல் ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், “2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த பல்வேறு முயற்சிகளையும் பிசிசிஐ எடுத்து வருகிறது. ஒருவேளை ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த அரசு அனுமதி வழங்காதபட்சத்தில், இத்தொடரை மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “இந்தாண்டு ஐபிஎல் தொடர்களை இந்தியாவில் நடத்த பிசிசிஐ பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தற்போது நடைபெற்றுவரும் சயீத் முஷ்டாக் அலி தொடருக்கு பிறகுதான், ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த சாத்தியங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆலோசிக்க முடியும்.
அதேசமயம் கடந்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது இந்தியாவின் டி20 தொடராகும். அதனால் முடிந்த அளவிற்கு இத்தொடரை அரசின் ஒப்புதலுடன் இந்தியாவில் நடத்துவதே அனைவரது விருப்பம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸின் ஹோப் சகோதரர்களுக்கு கரோனா!