கரோனா வைரஸ் காரணமாக மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் ஆடவர் அணிகளுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவிருந்தது.
ஆனால், உலகளவில் கரோனா வைரசின் தாக்கம் குறையாததால் டி20 உலகக்கோப்பை தொடர் தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஐசிசியின் ஆலோசனை கூட்டம் நாளை வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரை 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இந்தத் தொடர் தள்ளிவைக்கப்பட்டால் ஐபிஎல் டி20 தொடர் வரும் அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெறும் என பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், டி20 உலகக்கோப்பை தொடரை அடுத்தாண்டு பிப்ரவரி - மார்ச் மாதத்தில் நடத்த ஐசிசி முடிவு எடுத்துள்ளதாகவும் ஐசிசி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், வரும் அக்டோபர், நவம்பர் மாதத்தில் 13ஆவது ஐபிஎல் சீசனும், அடுத்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடரும் அதன் பிறகு மார்ச், ஏப்ரல் மாதங்களில் 14ஆவது ஐபிஎல் சீசனும் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஒருவேளை மேற்கூறிய தகவலின்படி அட்டவணை வெளியானால் அடுத்த ஆறு மாதங்களில் இரண்டு ஐபிஎல் தொடர்கள், ஒரு டி20 உலகக்கோப்பை என மொத்தம் மூன்று தொடர்கள் அடுத்தடுத்து நடைபெறும் என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: ஓய்வுக்கு பின் வர்ணனையில் கலக்குவேன்..!