டெல்லி: ஐபிஎல் 2020 சீசன் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், புதிய விதமுறைகள் நடக்கவிருக்கும் சீசனில் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 13வது சீசன் வரும் மார்ச் 29ஆம் தேதி தொடங்கி, மே 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நடைபெறவிருக்கும் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஐசிசி விதிமுறைப்படி போட்டியின்போது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கான மாற்று வீரர் களமிறங்கும் வீரர் பீல்டிங் மட்டுமில்லாமல் பேட்டிங், பவுலிங்கும் செய்யலாம் என்ற விதி தற்போது ஐபிஎல் தொடரிலிலும் நடைமுறைக்கு வருகிறது.
இதுபற்றி பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலி கூறியதாவது:
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐசிசி விதிமுறைப்படி கன்கஷன் சப்ஸ்டிட்யூட் அமலுக்கு வருகிறது. ஒரே நாளில் இரட்டைப் போட்டிகள் (நான்கு மணி மற்றும் எட்டு மணி) ஐந்து முறை மட்டுமே நடைபெறும். கள நடுவர்களைத் தாண்டி மூன்றாவது நடுவர் நோபால் அழைப்பை அறிவிக்கலாம்.
ஐபிஎல் தொடங்கும் முன் நிதி வசூலுக்காக ஆல் ஸ்டார் போட்டி ஒன்று நடைபெறும் என்று கூறினார்.
மூன்றாவது நடுவர் நோபால் அழைப்பு விடுவது நடந்து முடிந்த இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதிய தொடரில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து கிரிக்கெட் ஆலோசனை குழு (சிஏசி) பற்றி கேட்டபோது, அது இறுதிசெய்யப்பட்டது. பிசிசிஐ செயலாளர் விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார். சுலக்சனா நாயக், மதன் லால் இந்த குழுவில் உள்ளனர். கெளதம் கம்பீர் இடம்பெறவில்லை என்றார்.
அதேபோல் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முழுமையாக குணமாகவில்லை. என்சிஏவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர் முழு உடற்தகுதி பெற சிறிது காலம் தேவைப்படும்.
என்சிஏவுக்கு ஊட்டச்சத்து நிபுணரும், பயோ மெக்கானிக்கல் பவுலிங் பயற்சியாளரும் தேவை என விளம்பரம் செய்துள்ளோம் என்று கூறினார்.