ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இன்று (அக்.07) நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் ராகுல் திரிப்பாதி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திரிபாதி அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக திரிபாதி 81 ரன்களை குவித்தார்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்க வீரர்கள் ஷேன் வாடசன் - பாப் டூ பிளேசிஸ் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர்.
இதில் டூ பிளேசிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து வாட்சனுடன் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வாட்சன், ஐபிஎல் தொடரில் தனது 21ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். பின்னர் அரைசதம் அடித்த கையோடு விக்கெட்டையும் இழந்து வெளியேறினார்.
பின்னர் வந்த விரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியையை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.