இங்கிலாந்தின் மெரில்போன் கிரிக்கெட் கிளப் சார்பாக சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த வீரர்களைத் தேர்வு செய்து கவுரவிக்கும் வகையில், எம்.சி.சி.யின் வாழ்நாள் உறுப்பினருக்கான அந்தஸ்தை வழங்கி கவுரவப்படுத்தும். இந்த கிளப் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் மற்றும் தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் ஆகியோரைத் தேர்வு செய்து கவுரவப்படுத்தியுள்ளது.
இன்சமாம் உல் ஹக் 1991ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை 119 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இன்சமாம் உல் ஹக் 8829 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல் 378 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 11739 ரன்களைக் குவித்துள்ளார். அதேபோல் 2001 முதல் 2007 வரை பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
இவருக்கு முன்பாக பாகிஸ்தான் அணியில் இம்ரான் கான், வாசின் அக்ரம், வாக்கர் யூனிஸ் மற்றும் அப்ரிடி ஆகியோர் இந்த கிளப்பின் வாழ்நாள் உறுப்பினர்களாக கவுரவப்படுத்தப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்கா விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 கேட்ச்களை பிடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். 1997ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடிவர் 146 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 5,498 ரன்களையும், 530 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.
அதேபோல், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இணைந்து 998 கேட்ச்களை பிடித்த இவரது சாதனை இதுநாள் வரை யாராலும் தகர்க்கப்படாமல் உள்ளது.
தென்னாப்பிரிக்க அணியில் ஆலன் டோனால்டு, ஜாண்டி ரோட்ஸ், ஷான் பொல்லாக் மற்றும் டேரில் குல்லினன் ஆகியோர் கவுரவப்படுத்தப்பட்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.