உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி ஃப்ளோரிடாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். காயம் காரணமாக ஓய்விலிருந்த தவான் இன்றைய போட்டியில் களமிறங்கினார்.
தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஜான் கேம்பெலும் லெவிஸும் ரன் எதும் எடுக்காமலே நடையைக்கட்டினர். அதன்பின் வந்த பூரான் அதிரடியாக ஆடினாலும் 20 ரன்களில் அறிமுக பந்துவீச்சாளர் நவ்தீப் சைனியிடம் வீழ்ந்தார். இளம் வீரர் ஹெட்மைர் வந்த வேகத்திலே ரன் எதும் எடுக்காமல் சைனியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மிடில் ஆர்டரிலும் சொதப்பலாகவே ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னிலே பெவிலியன் திரும்பினர். ஆட்டம் ஆரம்பம் முதலே இந்தியா வசமே இருந்தது. மூத்த வீரர் பொல்லார்ட் மட்டும் ஒரு முனையில் நின்று போராடிக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு யாரும் ஒத்துழைக்கவில்லை.
பொறுப்புடன் விளையாடிய பொல்லார்ட் 49 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்தது. நவ்தீப் சைனி தன்னுடைய அறிமுக போட்டியிலேயே சிறப்பாகப் பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.