இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டி20 தொடரை இழந்தநிலையில், இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடிவருகிறது.
இந்தூரில் நேற்று தொடங்கிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 43, கேப்டன் மொமினுல் ஹாக் 37 ரன்கள் குவித்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஷமி மூன்று விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா, அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை எடுத்திருந்தது.
இதனிடையே மயங்க் அகர்வால் 37 ரன்களுடனும் புஜாரா 43 ரன்களுடனும் இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர். இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புஜாரா 54 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி ரன் ஏதுமின்றி இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹானேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை மூன்று விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைக் குவித்துள்ளது. மயாங்க் 91 ரன்களுடனும் ரஹானே 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசி கலக்கிய மயாங்க் அகர்வால் இம்முறையும் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.