இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 05ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக சென்னை வந்துள்ள இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தற்போது தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு ஆர்.டி - பிசிஆர் (RT-PCR ) எனப்படும் கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில், அணியில் யாரும் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வீரர்கள் தங்களது பயிற்சியை மேற்கொண்டு வருவதாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
பிசிசிஐயின் ட்விட்டர் பதிவில், "சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய அணி வீரர்களுக்கு மூன்று கட்டங்களாக ஆர்.டி - பிசிஆர் கரோனா கண்டறிதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பரிசோதனை முடிவில் வீரர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீரர்கள் இன்று முதல் தங்களது பயிற்சிகளுக்கு திரும்பியுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளது.
முன்னதாக இங்கிலாந்து அணி வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் சோதனையில், யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல் டெஸ்ட் போட்டிக்கான வாசிம் ஜாஃபரின் பிளேயிங் லெவன்!