இந்தியாவில் தென் ஆப்பிரிக்க ஆடவர் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டதைப் போலவே, இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும் ஏழு டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடிவருகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி சூரத் நகரில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் ஷஃபாலி வர்மா ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் நட்சத்திர வீரர் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஸ்மிருதி மந்தனா 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி 43 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஷப்னம் இஸ்மாயில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின்னர் 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணியின் தீப்தி சர்மா தனது சுழல் திறமையினால் தென்னாப்பிரிக்க அணியினரை துவம்சம் செய்தார். அந்த அணியின் கேப்டன் சுனே லூஸ் மட்டும் நிலைத்தாடி அரைசதமடித்தார்.
19.5 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி அனைந்து விக்கெட்டுகளையுமிழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி சார்பில் நான்கு ஓவர்களை வீசி மூன்று மெய்டன், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய தீப்தி சர்மா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.