ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. கான்பெர்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 51 ரன்களில் கே.எல். ராகுலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக ரவீந்திர ஜடேஜா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் 51 ரன்களையும், ஜடேஜா 44 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹென்ட்ரிக்ஸ் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டி ஆர்சி ஷார்ட் - ஆரோன் ஃபின்ச் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சிறப்பாக விளையாடி வந்த ஃபின்ச் 35 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஸ்மித்தும் 12 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த மேக்ஸ்வெல்லும் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த ஷார்ட் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியின் வெற்றி ஏறத்தாழ உறுதிசெய்யப்பட்டது.
அதன் பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் முதலாவது டி20 போட்டியை வென்றது. இந்திய அணி தரப்பில் நடராஜன், சஹால் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.
இதையும் படிங்க:கரோனாவிலிருந்து மீண்ட லூயிஸ் சுவாரஸ்