இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அபார ரன் குவிப்பில் ஈடுபட்டது. முதல் நாளில் இந்திய தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா - மயாங்க் அகர்வால் ஜோடி 59.1 ஓவர்களில் 202 ரன்களை எடுத்தபோது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் பாதியிலேயே ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோஹித் ஷர்மா 115 ரன்களுடனும், மயாங்க் அகர்வால் 84 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் காலை முதலே இருவரும் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கியதால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
அதன்பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்களாக டீன் எல்கர், எய்டன் மார்க்ரம் ஆகியோர் களமிறங்கினர். இதில் மார்க்ரம் ஐந்து ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வினின் பந்துவீச்சில் கிளின் போல்ட் ஆனார். பிறகு வந்த தியூனிஸ் டி ப்ரூயின் வந்த வேகத்திலேயே 4 ரன்களுடன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் பந்து வீசிய ஜடேஜா, டேன் பீட்டை ரன் எடுக்கவிடாமல் காலிசெய்தார். இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 34 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களை எடுத்துள்ளது.
அந்த அணியில் டீன் எலகர் 27 ரன்களுடனும், டெம்பா பவுமா இரண்டு ரன்களுடனும் களத்திலுள்ளனர். இந்திய அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளையும், ரவிந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இதன்மூலம் 463 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்க அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளது.
இதையும் படிங்க: #INDvSA : முதல் டெஸ்டில் கோலியை காலி செய்த தமிழன்!