ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒருபகுதியாக இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது.
இதில், வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்ட நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, டெஸ்ட் போட்டியில் தனது 100ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது.
இதன்மூலம், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றுவந்த இந்திய அணியின் தொடர் வெற்றிக்கும் நியூசிலாந்து அணி முற்றுப்புள்ளி வைத்தது. இப்போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தொடரில் அவர் ஒன்பது போட்டிகளில் ஒரு அரைசதம் உள்பட 201 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இரண்டு ரன்கள் எடுத்திருந்தபோது அவர் கைல் ஜிமிசன் பந்துவீச்சில் ஸ்லிப் திசையில் டெய்லரிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது இன்னிங்ஸில், கோலி போல்டின் ஷார்ட் பிட்ச் பந்தில் லாதமிடம் கேட்ச் தந்து 19 ரன்களுக்கு வெளியேறினார்.
ரன்மெஷின் எனக் கருதப்படும் கோலி, இப்போட்டியில் சொதப்பியதால் டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் கோலி கம்பேக் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்போட்டியிலும் கோலியை விரைவில் அவுட் செய்ய எங்களிடம் திட்டமிருப்பதாக நியூசிலாந்து வீரர் டாம் லாதம் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் அனைத்துவிதமான தட்பவெட்ப சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர்.
பச்சை பசேலென காட்சியளிக்கும் கிறிஸ்ட்சர்ச் ஆடுகளம் பவுன்ஸுக்கும், ஸ்விங்கிற்கும் நன்கு உதவினால், நிச்சயம் கோலியை நாங்கள் விரைவில் அவுட் செய்வோம்" என்றார்.
சிறந்த பந்துவீச்சாளர்களாகத் திகழ்ந்த பும்ரா, முகமது ஷமி ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தனர். இதனால், இவர்களது பந்துவீச்சை நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக கணித்து விளையாடுகின்றனர் எனப் பல்வேறு தரப்பினர் கருத்துதெரிவித்தனர். இது குறித்து பேசிய லாதம், "முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா, முகமது ஷமி ஆகியோரது பந்துவீச்சை எதிர்த்து நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஆனால், அவர்கள் உலகத்தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள். எனவே, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
அந்தச் சூழலில் நாங்கள் சிறப்பாகப் பேட்டிங் செய்தால் அதிக ரன்கள் குவிக்க எங்களுக்கு வாய்ப்புள்ளது. இந்தத் தொடருடன் முடியாமல், நீண்ட நாள்களுக்கு பும்ரா, முகமது ஷமி பந்துவீச்சை எதிர்த்து நிலையான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் அதிகாலை நான்கு மணிக்குத் தொடங்கவுள்ளது.
இதையும் படிங்க: பிரித்விஷாவுக்கு பதில் ஷுப்மன் கில்?