இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் முதல் போட்டி நடைபெற்றுவரும் நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.
இதையடுத்து இந்திய அணியில் தவான் 74 ரன்களும், ராகுல் 47 ரன்களும் எடுக்க பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 35 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்திருந்தது. அதையடுத்து ஜடேஜா - ரிஷப் பந்த் இணை சிறிது நேரம் தாக்குப்பிடித்தது.
இந்த இணை ஆறாவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்க்க, ஜடேஜா 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த் 28 ரன்கள் எடுத்து அதிர்ஷ்டமின்றி ஆட்டமிழக்க, அடுத்த சில நிமிடங்களில் தாகூர் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதனால் இந்திய அணி 45 ஓவர்களுக்கு 229 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஷமி - குல்தீப் யாதவ் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் சில ரன்கள் சேர்க்க இந்திய அணியின் ஸ்கோர் 250ஐ கடந்தது.
இதையடுத்து 48ஆவது ஓவரில் குல்தீப் யாதவ் 17 ரன்களில் ரன் அவுட் ஆக, பின்னர் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ஷமி 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணி சார்பாக ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய பேட்ஸ்மேன்கள்!