ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் மட்டும் மவுனம் சாதித்து வருகிறது.
அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு வர்த்தக ரீதியாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது.
இந்நிலையில், வருகின்ற மே மாதம் தொடங்கி நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா அமைப்பு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் செயலாளர் சுரேஷ் பஃப்னா பேசுகையில்,
"புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இதுவரை வாய் திறக்கவில்லை. இந்தத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றால், அதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் கருத்துத் தெரிவிக்காதது ஏன்? புல்வாமா தாக்குதல் குறித்து வெளிப்படையாக அவர் கருத்துத் தெரிவிக்க வேண்டும். மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். அவ்வாறு வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை என்றால் அவர்கள் பக்கம் ஏதோ தவறு இருக்கிறது என்றுதானே பொருள்’’ என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இருந்த இம்ரான்கானின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த புகைப்படத்தை எப்படி அகற்றுவது என்பது குறித்து முடிவெடுப்போம் என்றும் சுரேஷ் பஃப்னா தெரிவித்துள்ளார்.