மெல்போர்னில் நடைபெற்றுவரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே சதமடித்தும், ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்தும் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் இந்திய அணி 131 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியினர் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தும், 70 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் வழக்கமான கேப்டன் விராட் கோலி இல்லாத சூழலிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய தவான், “விராட் கோலி இல்லாத நிலையில்கூட ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா இவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் இந்திய அணி நிச்சயம் இத்தொடரை வெல்லும் என்று நான் நம்புகிறேன்.
அவர்கள் தங்களது பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதன்மூலம் அவர்கள் நாங்கள் எந்தவொரு அணியுடனும் மோதுவதற்குத் தயாராகவுள்ளோம் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
தற்சமயம் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிவரும் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 36 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் கேப்டன் ரஹானே - சுப்மன் கில் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:பாக்ஸிங் டே டெஸ்ட்: இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட டூ பிளேசிஸ்!