நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது.
இதில், டெய்லரின் அசத்தலான சதத்தால் நியூசிலாந்து அணி 48.1 ஓவரில் ஆறு விக்கெட்டை இழந்து 348 ரன்களை எட்டி, இந்திய அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி ஒருநாள் போட்டியில் தோல்வியடையும் 422ஆவது போட்டி இதுவாகும். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகளின் வரிசையில் இந்திய அணி இலங்கையை பின்னுக்கு தள்ளி தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது.
1974 முதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடிவரும் இந்திய அணி இதுவரை 985 போட்டிகளில் 513 வெற்றிகள், 422 தோல்விகளை சந்தித்துள்ளது. ஏனைய ஒன்பது போட்டி சமனிலும், 41 போட்டிகள் முடிவு எட்டப்படாமலும் இருந்துள்ளது.
ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்விகள் அடைந்த அணிகள்
- இந்தியா - 422 தோல்விகள் ( 985 போட்டிகள்)
- இலங்கை - 421 தோல்விகள் (849 போட்டிகள்)
- பாகிஸ்தான் - 413 தோல்விகள் (927 போட்டிகள்)
- வெஸ்ட் இண்டீஸ் - 378 தோல்விகள் (819 போட்டிகள்)
- நியூசிலாந்து - 373 தோல்விகள் (769 போட்டிகள்)
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துவந்தாலும், இந்திய அணி இதுபோன்ற மோசமான சாதனை படைத்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம், அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அணிகளின் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 945 போட்டிகளில் விளையாடியுள்ளது.
இதையும் படிங்க: சொந்த மண்ணில் கடைசி தொடரில் களமிறங்கும் பயஸ்!