இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதாலாவது ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் கம் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 71 ரன்களை எடுத்தார். ஆட்ட முடிவுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரிஷப் பந்த்,
' நான் ஒவ்வொரு நாளும் எனது திறமைகளை வளர்த்து கொண்டுதான் வருகிறேன். ஆனால், ஆட்டத்தின் சூழ்நிலை காரணமாகவும், அணியின் வேண்டுகோள் காரணமாகவும் உங்களால் உங்களுடைய இயல்பான விளையாட்டை விளையாடுவது என்பது முடியாத காரியம். ஒருவேளை உங்களுடைய பேட்டிங் சிறப்பாக இருந்தால் நீங்கள் நேரத்திற்கு ஏற்றார் போல் விளையாட இயலும். என்னைப் பொறுத்தமட்டில் என்னால் அணிக்கு என்ன செய்ய இயலும் என்பதை மட்டுமே நான் யோசித்து வருகிறேன் ‘ எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ' தனிப்பட்ட முறையில், நான் இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு இன்னிங்ஸும் எனக்கு முக்கியம். ஒரு இளைஞனாக, நான் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் என்னைக் கற்றுக்கொள்ளவும் மேம்படுத்தவும் விரும்புகிறேன். மேலும் ரசிகர்களின் உற்சாகம் அனைத்து வீரர்களுக்கும் மிகவும் அவசியமானது. ஆனால், அதனை என்னால் முழுமையாக பூர்த்தி செய்ய இயலவில்லை. ஆனால் என்னால் முடியாது என நான் ஒதுங்கவில்லை. நான் அதற்கு முயற்சிக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 18ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மானுக்கு பிடித்த வீரர் இவர்தான் - சச்சினோ, கோலியோ இல்லை!