இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டி பிப்ரவரி 4ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இது என்பதால், இப்போட்டியை மைதானத்தில் காண கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் கரோனா பரவல், வீரர்களின் பாதுகாப்பு காரணங்களினால் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களை அனுமதிக்க வாய்ப்பில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இத்தொடரின் மற்ற போட்டிகளுக்கு பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கும். ஆனால் சென்னையில் நடைபெறும் இரண்டு போட்டிகளிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதனால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களின் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்து மகிழவும்" என்று தெரிவித்துள்ளது.
ஓராண்டிற்கு பிறகு இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டர்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடந்த சீசனில் 8 போட்டிகளில் 62 ரன் மட்டுமே... கேதர் ஜாதவை விடுவித்தது சிஎஸ்கே நிர்வாகம்!