ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே ஒரு டெஸ்ட் போட்டி முடிந்துள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று (டிச.26) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்பது சந்தேகம் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டீன் லங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய ஜஸ்டீன் லங்கர், "காயம் காரணமாக டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ள டேவிட் வார்னர், இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இருப்பினும் அவர் பேட்டிங் செய்யப் பயிற்சி எடுப்பதை நாங்கள் கண்டோம். அவர் மெல்போர்னில் தொடர்ந்து வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இருப்பினும் காயம் காரணமாக அவர் சிக்கலை சந்தித்து வருகிறார். ஏனெனில் அவர் விக்கெட்டுகளுக்கு மத்தியில் ஓடுவது, அவரது இயக்கம் ஆகியவை குறித்து எங்களுக்குத் தெரியும். அதேசமயம் அடுத்த டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. அதற்குள் அவர் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைவாரா என்பது தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் வார்னர் அடுத்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னதாக இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரிலிருந்தும், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் காயம் காரணமாக வார்னர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல் : முதல் வெற்றியை நோக்கி ஹைதராபாத்திடம் மல்லுக்கட்டும் கேரளா!