உலக சாலைப் பாதுகாப்பை மையப்படுத்தி, கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை வைத்து நடத்தப்படும் உலக சாலைப் பாதுகாப்பு டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ் அணி, பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் தரன் கங்கா 32 ரன்களையும், சந்தர்பால் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து 61 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிரையன் லாரா 17 ரன்னுக்கும், ஹூப்பர் 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை சேர்த்தது.
அதன்பின் வெற்றியை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் சச்சின் 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சேவாக் அரை சதமடித்து அசத்தினார்.
தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த சேவாக்குடன், யுவாராஜ் சிங்கும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் இந்திய லெஜண்ட்ஸ் அணி 18.2 ஓவர்களிலேயே வெற்றியை அடைந்தது. இதில் சிறப்பாக விளையாடி சேவாக் 74 ரன்களை சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்முலம் உலக சாலைப் பாதுகாப்பு டி20 தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய லெஜண்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் வீரேந்திர சேவாக் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்த தாதா!