உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் ஆனாலும், அப்போட்டி குறித்து ரசிகர்கள் இன்றளவும் ஐசிசியின் விதிமுறையை விமர்சித்துதான் வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், பவுண்ட்ரி விதிப்படி ஐசிசி இங்கிலாந்துதான் உலகக்கோப்பை வின்னர்ஸ் என அறிவித்ததால், பெரும் சர்ச்சையும் ஏற்படுத்தியது.
ரன் அவுட்தான் அந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டி, இறுதிப் போட்டி ஆகிய ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றியமைத்தது. மார்டின் கப்திலின் த்ரோ, ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு பந்து சென்றதால், நடுவர் குமார் தர்மசேனா ஆறு ரன்கள் வழங்கினார். ‘இதற்கு ஐந்து ரன்கள்தான் வழங்க வேண்டும், நான் தவறு செய்துவிட்டேன்’ என அவரே தவறை ஒப்புக்கொண்டார். இந்த விதி குறித்து ஐசிசி இன்னும் சில நாட்களில் விவாதிக்க உள்ளது வேறு கதை.
நாம், ஐசிசியின் மற்ற விதிமுறைகளின் கதைக்கு வருவோம். இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், ஒரு ரன் எடுத்த பிறகு மார்க் வுட் இரண்டாவது ரன் எடுக்க முயன்ற போது ரன் அவுட் ஆனார். இதனால், போட்டி சமனில் முடிய ஐசிசி சூப்பர் ஓவர் முறையை கொண்டுவந்தது.
சரி, அப்படி ஒரு 12 ஆண்டுகளை பிளாஷ்பேக் செய்துபாருங்கள், இதே போன்று கடைசி பந்தில் ஒரு ரன் அவுட். ஆட்டம் டையில் முடிகிறது, போட்டியின் முடிவை தெரிந்துகொள்ள ஐசிசி பவுல் அவுட் விதிமுறையை கடைபிடித்தது. முதல் டி20 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் 2007ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி செப்டம்பர் 14இல் நடக்கிறது.
இதில், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலையில், மிஸ்பா ரன் அவுட் ஆனதால் போட்டி டையில் முடிந்தது. முந்தயை தொடர்களை போல போட்டி சமனில் முடிந்தால், ஒரு புள்ளியை பகிர்ந்து தந்திருந்தாலும் இந்திய அணி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும். ஆனால், போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டுமென ஐசிசி திட்டவட்டமாக இருந்தது. இதனால், கால்பந்து விளையாட்டில் பயன்படுத்தும் பெனால்டி கிக் ஸ்டைலில் ஐசிசி பவுல் அவுட் முறையை பயன்படுத்தியது.
இதில், 3-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. தோனியின் முதல் கேப்டன்ஷிப் போட்டியே இந்த அளவிற்கு த்ரிலிங்காகச் சென்றது. பவுல் அவுட் முறையில் இந்திய அணி வெற்றிபெற்றதால், இந்திய ரசிகர்கள் இந்த முறையை பெரிதும் வரவேற்றனர். பின்நாட்களில், பவுல் அவுட் விதிமுறை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிரும் விமர்சித்திருந்தார். ஐசிசியின் இந்த விதிமுறை மடத்தனமாக இருக்கிறது என விமர்சனங்களும் எழுந்தன.
ஏனெனில், இந்த விதிமுறையில் லாஜிக் என்பதே இல்லை. ஒட்டுமொத்த ஆட்டத்தின் முடிவையும் வேறு கோணத்தில் மாற்றுகிறது. அதன்பின், ஐசிசி டி20 போட்டிகளில் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க பவுல் அவுட்டுக்கு பதிலாக ஐசிசி சூப்பர் ஓவரை அறிமுகம் செய்தது. ஆனால், நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனதால் பவுண்ட்ரி விதிமுறையை ஐசிசி பயன்படுத்தியது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகதான் இருக்கிறது.
பவுல் அவுட் ஆப்ஷனிலிருந்து எப்படி சூப்பர் ஓவரை அறிமுகம் செய்ததோ அதேபோல, சூப்பர் ஓவரிலும் போட்டி டையானால்,பேட்ஸ்மேன் பவுலர் இருவருக்கும் சமமாக இருக்கும் அளவில் வேறு ஏதெனும் புதிய விதிமுறையை ஐசிசி அறிமுகம் செய்யும் என நம்பலாம்.