இந்திய அணிக்காக 2006ஆம் ஆண்டில் அறிமுகமாகி 46 ஒருநாள் போட்டிகள், 12 டி20 போட்டிகளில் பங்கேற்றவர் ராபின் உத்தப்பா. அதையடுத்து அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலும், ஐபிஎல் தொடர்களில் கொல்கத்தா அணிக்காக கலக்கி வந்தார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் உரையாடிய ராபின் உத்தப்பா, ''2006ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகியபோது நான் விழிப்புணர்வுடன் இல்லை. எந்தவொரு ஒரு இடத்தில் தடுமாறினாலும், எப்படி வெளிவருவது என தெரியவில்லை. ஆனால் இப்போது அப்படியில்லை. நான் எங்கே தடுமாறுகிறேன் என வேகமாக தெரிந்துகொண்டு வெளியே வந்துவிடுகிறேன். எனது ஆட்டத்தையும் மாற்றியுள்ளேன்.
நான் கடினமான நேரங்களை எதிர்கொண்டுள்ளதால் தான் இந்த இடத்தில் இப்போது நிற்கிறேன். 2009 முதல் 2011 காலக்கட்டங்களில் ஒவ்வொரு நாளும் எனக்கு அதிகமாக தற்கொலை எண்ணங்கள் எழும். அந்த நேரத்தில் எந்த பாதையில் செல்வது என தெரியாது. இந்த நாளினை கடத்தினால் போதும் என ஆறுதல் கொள்வேன். அதிலிருந்து மீண்டு வருவதற்கு கிரிக்கெட் தான் உதவியது.
கிரிக்கெட் போட்டிகளும், பயிற்சிகளும் இல்லாத நாள்கள் கடினமாக இருந்தன. அந்த நேரத்தில் எனது பால்கனியில் உடற்பயிற்சி செய்தேன். எனது எண்ணங்கள் பற்றி வெளியில் கூறி உதவிகள் கேட்டேன்.
சில நேரங்களில் வாழ்க்கையில் சில எதிர்மறை எண்ணங்கள் எழுவதும் சரிதான் என நினைக்கிறேன். எனது அனுபவங்கள் தான் என்னை நல்ல மனிதனாக செதுக்கியது. அனைத்து நேரங்களில் பாசிட்டிவாக இருக்க முடியாது. வாழ்க்கைக்கு இரண்டுமே தேவை'' என்றார்.