கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 13ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும், வைரஸ் தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதனால், ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், விளையாட்டு வீரர்கள் தங்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தினம்தோறும் தங்கள் அணி வீரர்களுடன் இன்ஸ்டாகிராம் நேரலை மூலமாக நேர்காணல் நடத்திவருகிறது.
இதில் பங்கேற்ற சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் கேதர் ஜாதவ், தான் அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க தோனி உறுதுணையாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேரலையில் கூறியதாவது,
“இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான் எனது முன்மாதிரி. ஆனால் அவருடன் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை என்பது வருத்தம்தான். ஆனால் அவருக்கு அடுத்தப்படியாக எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் தோனி. முதலில் நான் அவரை நேரில் காணும் போது, அவர் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்வார் என நினைத்திருந்தேன். மாறாக நான் மற்ற வீரர்களுடன் பழகியதை விட அவரிடம் ஏற்பட்ட நெருக்கம் மிகவும் அதிகமானது.
நான் முதல் பத்து ஒரு நாள் போட்டிகளில் பெரிதளவில் எதுவும் செய்ததில்லை. அப்படி இருந்த போதிலும் முன்னாள் கேப்டன் தோனி என்மீது நம்பிக்கை வைத்து அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுத்தார். போட்டிக்கு இடையில் அவரை காணும்போதெல்லாம் என்னுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.
அதனையடுத்து கேதார் ஜாதவின் முறையற்ற சைடு ஆர்ம் பந்து வீச்சு(side-arm bowling) குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரின் வலை பயிற்சியின் போது பந்துவீச முயற்சி செய்துகொண்டிருந்தேன். அப்போதைய பயிற்சியாளர் என்னிடன் இது முறையற்ற பந்துவீச்சு எனக்கூறினார்.
ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் தோனி என்னிடம் பந்துவீசும் படி கூறினார். அந்தப் போட்டியில் நான் நியூசிலாந்து அணியின் ஜிம்மி நீஷமின் விக்கெட்டை கேட்ச்&போல்ட் முறையில் கைப்பற்றினேன். அதுவே எனது முதல் சர்வதேச விக்கெட்டாகும். அதன்பிறகு தோனியின் முயற்சியினால் அடுத்தடுத்த போட்டிகளில் நான் பந்துவீச்சாளராக செயல்பட்டேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வீரர்களின் ஓப்பந்த பட்டியல் குறித்து ஃபிஃபா ஆலோசனை!