கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடைப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடர் மூலம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததால் முதல்முறையாக கேப்டன்சியில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ் மீது பலரும் விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். களத்தில் அவர் எடுத்த சில தவறான முடிவுகளே தோல்விக்கு காரணம் என கூறுகின்றனர்.
இந்நிலையில் தோல்வி குறித்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், ''நான் யாரையும் தவறு சொல்ல முடியாது. ஓய்வறையில் அனைத்து வீரர்களுமே சோகமாக தான் இருக்கின்றனர். ஐந்து நாள்கள் தொடர்ந்து விளையாடி, கடைசி நாளின் இறுதியில் தோல்வியைத் தழுவும்போது கவலையளிக்கிறது. இறுதிவரை எங்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்தினோம்.
எங்கள் அணியில் உள்ள அனைவரையும் நினைத்து பெருமைகொள்கிறேன். நிச்சயம் நாங்கள் அனைவரும் இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்போம்.
அடுத்தப் போட்டியில் கேப்டன் ஜோ ரூட் அணியில் இணைவார். அவர் அணியில் இணைவதால், இனி நான் எந்தவிதமான தவறான முடிவுகளையும் எடுக்க தேவையில்லை.
பிராட்டை அணியில் இருந்து நீக்கியதற்கு, அவர் இவ்வாறு விமர்சிக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம். மிகச்சிறந்த வீரர் அவர். அடுத்தப் போட்டியில் களமிறங்குவார் என நினைக்கிறேன். 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடியபின்பும், சீனியர் வீரர் இந்த அளவிற்கு அணிக்காக களமிறங்குவதற்கு ஆர்வமாக இருப்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது'' என்றார்.
இதையும் படிங்க: 'இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் நிச்சயம் நடைபெறும்' - கங்குலி உறுதி