இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்குடன் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பீட்டர்சன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அந்த உரையாடல் 2007ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைத் தொடரின் 6 சிக்சர்கள் அடித்த சம்பவம் குறித்து நடந்தது.
அதைப் பற்றி யுவராஜ் சிங் கூறுகையில், ''ப்ளிண்டாப் வீசிய ஓவரில் நான் இரு பவுண்டரிகளை விளாசினேன். அதையடுத்து கடைசி பந்தில் ஒரு சிங்கிள் ஓடினேன். அப்போது அவர் என்னிடம், ”உன் கழுத்தை அறுக்கப்போகிறேன்” என்றார். அது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதனால், எனது கையில் உள்ள பேட்டை வைத்து எங்கே அடிப்பேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்றேன்.
அதன்பின்னர் பிராட் பந்தில் 6 சிக்சர்கள் விளாசிவிட்டு முதலாவதாக இங்கிலாந்தின் மஸ்காரினாசையும், இரண்டாவதாக ப்ளிண்டாப்பையும் பார்த்தேன்.
ஒருநாள் போட்டியின்போது டிமிட்ரி மஸ்காரினாஸ் எனது பந்தில் தொடர்ந்து 5 சிக்சர்கள் விளாசினார். அதனால் அவரைப் பார்த்துவிட்டு, இரண்டாவதாக ப்ளிண்டாப்பை பார்த்தேன். அந்தப் போட்டியை யாராலும் மறக்க முடியாது'' என்றார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. சமீபத்தில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற யுவராஜ் சிங், கரோனா வைரஸ் காலத்தில் ஒவ்வோரு நாளும் ஒரு கிரிக்கெட் வீரரோடு நடத்தும் உரையாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: யுவராஜ் சிங்கின் சேலஞ்ச்சை காலிசெய்த சச்சின்!