இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்த கெவின் பீட்டர்சனின் இறுதிகால கிரிக்கெட் வாழ்க்கைப் பற்றி தற்போதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான ஆண்டரூ ஸ்ட்ராஸ் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் ரசிகர்கள் இதயத்தில் தனக்கென தனி இடத்தை பெற்றிருந்த பீட்டர்சனுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி மூலமாக வந்த பிரச்னை அவரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கே முட்டுக்கட்டை போடும் என்று அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
கடந்த 2012ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி, இங்கிலாந்துக்குச் சுற்றப்பயணம் மேற்கொண்டது. மூன்று போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே தனது ஆதிக்கத்தை செலுத்தியது. அந்த தொடரில் இரண்டாவது போட்டியில் நடந்த நிகழ்வு பீட்டர்சனின் கிரிக்கெட் வாழ்வையேப் புரட்டிப்போட்டது.
இங்கிலாந்து அணி கேப்டன் உள்பட சக வீரர்கள் பற்றி தென்னாப்பிரிக்கா அணிக்கு குறுந்தகவலில் செய்தி அனுப்பி பீட்டர்சன் சிக்கிக்கொண்ட சம்பவம் தான் அது. இதன் காரணமாக, அணியிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட பீட்டர்சன், கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட குழுவில் இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பிடித்து, அந்த அணியின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்று தொடரை கைப்பற்ற உதவினார். தொடரைக் கைப்பற்றி கொடுத்த அந்த ஆண்டே அவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.
தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஆண்ட்ரு ஸ்ட்ராஸ், பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது பீட்டர்சன் குறித்து நினைவுக்கூர்ந்து உள்ளார்.
அப்போது பீட்டர்சன் மீது தனக்கு எப்போதும் அக்கறை உண்டு என்றும், அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கப் போவதாகக் கூறிய நேரத்தில், உங்களுக்கு இன்னும் இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும், இங்கிலாந்து அணியில் விளையாடி கொண்டே இடைப்பட்ட காலத்தில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுக் கொள்ளுங்கள் என்றும் தான் அறிவுறுத்தியதாகத் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,"அதிகப் பணம் புழங்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனைவரும் விரும்புவது இயல்புதான், ஆனால், இதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒரு தலைவராக முடிவெடுக்க வேண்டிய சூழலில் தான் இருந்ததாகவும், ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஏதுவாக நாட்டின் கிரிக்கெட் தொடர் அட்டவணை வேறு தேதிக்கு மாற்றுவது குறித்து சிந்தித்ததாகவும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.