ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அணிகளுக்கு இடையேயான கிவிபுக்கா மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இன்று கிகாலி நகரில் நடைபெற்ற போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த உகாண்டா - மாலி மகளிர் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய உகாண்டா அணியின் வீராங்கனைகள் மாலி அணியின் பந்துவீச்சை பொளந்து கட்டியதால் அந்த அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 314 ரன்களை குவித்தது. இதுவே டி20 கிரிக்கெட் போட்டிகளில் (ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவிலும்) குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.
மாலி அணியின் பந்துவீச்சாளர்கள் இப்போட்டியில் மொத்தமாக 30 நோபால், 28 வைடு உள்ளிட்ட 61 உதிரிகளை வாரி வழங்கியதும் இந்த ரன் குவிப்புக்கு காரணமாக அமைந்தது. மேலும் மாலி அணி வீராங்கனை மூன்று ஓவர்கள் மட்டுமே வீசி 82 ரன்கள் வழங்கியதே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் கொடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய மாலி அணி 11.1 ஓவர்களில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 304 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணி டி20 கிரிக்கெட்டில் அபார வெற்றியை பதிவுசெய்தது.
மாலி அணி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ரிவாண்டன் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்களில் ஆட்டமிழந்து டி20 போட்டியில் மிகக் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.