கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கரோனா வைரஸ் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தொடரை வரும் செப்டம்பர் மாத இறுதி முதல் நவம்பர் வரை பார்வையாளர்களின்றி நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியது.
இருப்பினும், நாட்டின் தற்போதைய சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் இந்தத் தொடரை வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐயின் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்திருந்தார். இதனிடையே, ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் நடத்திட இலங்கை கிரிக்கெட் வாரியமும், ஐக்கிய அரபு அமீரகமும் விருப்பம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், அவர்களுடன் இந்தத் தொடரை நடத்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் விருப்பம் தெரிவித்ததாக கடந்த சில நாள்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது மறுத்துள்ளது. இதுகுறித்துப் பேசிய நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பூக், "எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஐபிஎல் தொடரை நடத்த நாங்கள் முன்வந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஐபிஎல் தொடரை எங்கள் நாட்டில் நடத்த நாங்கள் எந்த விருப்பமும் தெரிவிக்கவும் இல்லை. அதுகுறித்து யோசிக்கவும் இல்லை" என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஐபிஎல் தொடர் இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது.