இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோது பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் இளம் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்குவார் என அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டிம் பெய்ன், "காமரூன் கிரீன் நன்றாக பயிற்சி பெற்றவர். அவர் எல்லாவற்றையும் சரியாக செய்யும் திறன் படைத்தவர். இதனால் அவர் நாளை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகவுள்ளார். இது எங்களுக்கும், ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி.
கிரீன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக உருவாக்கப்படுகிறார்:
ஏனெனில் ஆஸ்திரேலியாவின் 21 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் கிரீன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது விளையாட்டு யுக்திகள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை. இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக உருவாக்கப்பட்டு வருகிறார்.
அவர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹாசில்வுட் ஆகியோருடன் இணைந்து பந்துவீச்சில் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் நாங்கள் அவரை ஒரு ஆல்ரவுண்டர் பட்டியலிலேயே அணியில் சேர்க்கவுள்ளோம். ஏனெனில் அவரது பேட்டிங் திறனையும் நாங்கள் அறிவோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள கேமரூன் கிரீன், இதுவரை 21 போட்டிகளில் விளையாடி 1321 ரன்களையும், 33 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில் ஐந்து சதங்களையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விவசாயிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும்: ட்விட்டரில் மோதிக்கொள்ளும் சர்வதேச மல்யுத்த வீரர்கள்!