ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வேல் அக்டோபர் 30ஆம் தேதி, தான் மனநல பிரச்னை காரணமாக, கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக விடுப்பு எடுப்பதாக அறிவித்தார். மேக்ஸ்வெலின் இந்த முடிவை கிரிக்கெட் வீரர்கள் பலரும் வரவேற்றனர். இந்த நிலையில், 22 நாட்களாக ஓய்விலிருந்த மேக்ஸ்வெல் தற்போது கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். விக்டோரியா மாநிலத்தில் நடைபெறும் விக்டோரியா ப்ரீமியர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஃபிட்ஸ்ராய் டான்கெஸ்டர் (Fitzroy Doncaster) அணி, ஜீலாங் அணியுடன் மோதியது.
இதில், ஃபிட்ஸ்ராய் அணிக்காக விளையாடிய மெக்ஸ்வேல் இப்போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேக்ஸ்வெலை போல மன உளைச்சல் காரணமாக நவம்பர் 9ஆம் தேதி கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் விலகிய நிக் மேடிசனும் இந்தத் தொடரில் விளையாடினார். கெசே சவுத் மெல்போர்ன் அணிக்கு எதிரான போட்டியில் செயின்ட் கில்டா அணிக்காக விளையாடிய அவர் 58 ரன்கள் விளாசினார்.
ரசிகர்களுக்கு பிடித்தமான வீரர்களில் ஒருவரான மேக்ஸ்வெல் தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கியிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.