ஆஸி.யிடம் சரண்டரான இந்தியா:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், 256 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வார்னர், கேப்டன் ஃபின்ச் ஆகியோரின் சதத்தால் 37.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
வார்னர் 128 ரன்களுடனும், ஃபின்ச் 110 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
14 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி சந்தித்த மோசமான தோல்வி:
இப்போட்டியின் மூலம் இந்திய அணி 14 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. இறுதியாக, இந்திய அணி 2005இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில்தான் இப்படி ஒரு தோல்வியை பதிவு செய்திருந்தது. இதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி இதுபோன்று எதிரணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைவது இது ஐந்தாவது முறையாகும்.
இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போட்டிகள்:
எதிரணி | இலக்கு | இடம் | ஆண்டு |
நியூசிலாந்து | 113 | மெல்போர்ன் | 1981 |
வெஸ்ட் இண்டீஸ் | 200 | பிரிட்ஜ்டவுன் | 1997 |
தென் ஆப்பிரிக்கா | 165 | ஷார்ஜா | 2000 |
தென் ஆப்பிரிக்கா | 189 | கொல்கத்தா | 2005 |
ஆஸ்திரேலியா | 256 | மும்பை | 2020 |
தோல்விக்கான காரணம் குறித்து பேசிய கோலி:
"எங்களை விட ஆஸ்திரேலிய அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலிய போன்ற வலுவான அணிகளிடம் சரியாக விளையாடவில்லை என்றால் அவர்கள் உங்களை காயப்படுத்துவார்கள். இந்தப் போட்டியில் எங்களது பேட்டிங்கின்போது அதை நாங்கள் உணர்ந்தோம். இந்த ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததற்காக ரசிகர்கள் யாரும் பயப்படதேவையில்லை. நிச்சயம் இந்தத் தோல்வியிலிருந்து எழுச்சி பெற்று அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்தார்.
இப்போட்டியில் கேப்டன் கோலி வழக்கத்துக்கு மாறாக எப்போதும் போன்று மூன்றாவது வரிசையில் களமிறங்காமல் நான்காவது வரிசையில் களமிறங்கியது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பேட்டிங் வரிசையில் மாற்றி களமிறங்கியது குறித்து பேசிய கோலி, "முன்னதாக பல முறை நான்காவது வரிசையில் களமிறங்குவது குறித்து விவாதித்துள்ளோம். சமீப நாட்களாக கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடிவருவதால் இம்முறை அவரை முன்வரிசையில் பேட்டிங் செய்ய முயற்சித்தோம். எனினும் இது குறித்து நாங்கள் மீண்டும் ஆலோசிக்க வேண்டும். இனி விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் வீரர்களை முன்வரிசையில் களமிறக்க வைத்து பரிசோதனை செய்து பார்ப்போம்" என்றார்.
இதைத்தொடர்ந்து, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: இம்முறையும் ஆஸி.க்கே கோப்பை - ரிக்கி பாண்டிங் கணிப்பு!