இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடியவர் முரளி விஜய். ஆனால் 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின்போது ஃபார்மின்மை காரணமாக இந்திய அணியில் இருந்து முரளி விஜய் கழற்றிவிடப்பட்டார். அதையடுத்து அவரது இடத்தில் மயாங்க் அகர்வால் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
இதுகுறித்து முரளி விஜய் மனம் திறந்துள்ளார். அதில், ‘பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பதவியேற்றிருப்பதையடுத்து, இந்திய கிரிக்கெட்டிலும், அணியிலும் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என நினைக்கிறேன். இந்திய அணிக்காக ஆடி ஃபார்மின்றி வெளியேறிய வீரர்கள் அணிக்குள் திரும்ப கங்குலி வழிவகுக்க வேண்டும். ஏனென்றால், கங்குலியும் அணியிலிருந்து ஃபார்மில்லாமல் கழற்றிவிட்டபோது போராடி அணிக்குள் இடம்பிடித்துள்ளார்.
எனவே கிரிக்கெட்டர்களின் உணர்வுகளும், மனரீதியிலான பாதிப்புகளும் எவ்வாறு இருக்கும் என கங்குலிக்கு தெரியும். எனக்காக மட்டும் நான் பேசவில்லை. அணியில் சரியாக ஒருமுறை விளையாடாத வீரர்களை அணியைவிட்டு நீக்கியபின், அணிக்குள் மீண்டும் இடம்பெற வாய்ப்பு வழங்கவேண்டும். சரியான தகவல்கள் இல்லாமல் ஒப்பந்தங்களிலிருந்து நீக்கப்படுகிறோம். இதுகுறித்து நிச்சயம் கங்குலி நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது’ எனப் பேசியுள்ளார்.
கடந்த தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் சாஹாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது, இந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அதனை சாஹாவும் பயன்படுத்திக்கொண்டார். ஆனால் முரளி விஜய்க்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
பிசிசிஐ தலைவராக கங்குலி பதவியேற்ற பின், தான் தலைவராக இருக்கும் வரை இந்திய அணிக்காக பங்காற்றிய வீரர்களுக்கு நிச்சயம் மரியாதை வழங்கப்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாய்ப்பு வழங்கப்படாத வீரர்களும், கழற்றிவிடப்பட்ட வீரர்களும்!