இந்தியாவில் 2008ஆம் ஆண்டு முதல் ஆண்களுக்கான ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டுவருகிறது. மகளிருக்கான ஐபிஎல் தொடரையும் பிசிசிஐ கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவருகிறது. இந்நிலையில், இத்தொடரின் மூன்றாம் சீசன் வருகிற செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம்வரும் ஜெமிமா ரோட்ரிக்ஸ், மகளிர் ஐபிஎல் தொடரானது ஷஃபாலி வர்மா போன்ற மிகச்சிறந்த வீராங்கனைகளை இந்திய அணிக்காக வெளிக்கொண்டுவர உதவும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய ரோட்ரிக்ஸ், "ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் மற்றும் இங்கிலாந்தின் கியா சூப்பர் லீக் ஆகியவை புதுமுக விரங்கனைகனைகளை மகளிர் கிரிக்கெட்டிற்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் மகளிர் ஐபிஎல் தொடர் புதிய திறமைகளைக் கொண்ட விராங்கனைகளை இந்தியாவிற்கு வழங்கும் என நம்புகிறேன்.
மகளிர் ஐபிஎல் மூலம் ஷஃபாலி வர்மாவை நாங்கள் பெற்றோம். அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு, தற்போது அதே பணியை இந்திய அணிக்காகவும் செய்துவருகிறார். இதுபோன்ற தொடர்கள் நடத்தப்படுவதால் இன்னும் பல திறமைவாய்ந்த வீராங்கனைகளை நாம் பெற முடியும்" என்றார்.