இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சவுரவ் கங்குலிக்கு எப்போதும் தனி இடமுண்டு. இப்போதும் பெரும்பாலான ரசிகர்களிடம் உங்களுக்கு பிடித்த ஃபேவரைட் இந்திய அணியின் கேப்டன் யார் என்று கேட்டால் அவர்கள் கங்குலியின் பெயரை தான் முதலில் சொல்வர்.
கடந்த 1999இல் சூதாட்டம் மேட்ச் பிக்சிங் என சிதைந்துகிடந்த இந்திய அணியை தனது கேப்டன்ஷிப்பால் மறுகட்டமைப்பு செய்தார் கங்குலி. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் வீரர்களான சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், முகமது கைஃப், தோனி ஆகியோருக்கு இந்திய அணிக்குள் வாய்ப்பு வழங்கினார், அவர்களை சிறந்த வீரர்களாகவும் மாற்றினார்.
அவர் கட்டமைத்த இந்திய அணியை தலைமை தாங்கி, கடந்த 2011இல் உலக கோப்பையை வென்று தந்தார் தோனி. இவர், கடந்த 1992இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாலும், ரசிகர்கள் மத்தியில் இவரது பெயர் நினைவு கொள்ளப்பட்டது 1996 இங்கிலாந்து டெஸ்ட் தொடர்தான்.
தான் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே லாட்ர்ட்ஸ் மைதானத்தில் வைத்து சதம் விளாசியது மட்டுமில்லாமல் மீண்டும் அடுத்த போட்டியிலேயே இரண்டாவது சதம் விளாசி அனைத்து வீரர்களும் கனவில் காணும் ஆட்டத்தை மைதானத்தில் செய்து காட்டினார் கங்குலி.
அதன் பிறகு அவர் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் செய்த சாகசங்களும், சாதனைகளும் ஏராளம். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளில் (1997,1998,1999,2000) 1300க்கும் மேல் ரன் குவித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதிலும் கடந்த 1999 உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக அவர் அடித்த 183 ரன்கள் தான் பெரும்பாலான ரசிகர்களின் ஃபேவரைட் இன்னிங்ஸ். ரசிகர்களால் ஆஃப் சைடின் கடவுள் என அழைக்கப்படும் இவர், கிரிக்கெட் கடவுள் சச்சினுடன் பார்ட்னர்ஷிப் வைத்து ரன் குவித்தது எல்லாமே மேஜிக்தான். மற்ற ஜோடிகள் கற்பனை செய்து பார்க்காத அளவிற்கு இந்த ஜோடி ரன் சேர்த்துள்ளது.
பின் 2000ஆம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்று தனது கம்பிரமான முடிவுகளால் அதுவரை இல்லாத அளவிற்கு அணியை சிறப்பாக வழிநடத்தினார். கங்குலியின் கேப்டன்ஷிப் சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணமே பயிற்சியாளர் ஜான் ரைட்தான்.
இவர்களது கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க்அவுட்டானதால் 2000 முதல் 2005 வரை இந்திய அணிக்கு பொற்காலம். கடந்த 2000 ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இறுதிப்போட்டி, 2002 நாட்வெஸ்ட் தொடர் வெற்றி, அதே ஆண்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியை இலங்கை அணியுடன் பகிர்ந்துகொள்ளுதல், பின் 2003 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி என இந்திய அணி பல உச்சங்களை எட்டியது.
குறிப்பாக, 2002 லாட்ர்ஸ் வெற்றியின்போது இவர் பால்கனியில் டி ஷர்ட்டை கழட்டி செலப்பிரேட் செய்ததை இப்போதும் நினைத்தால் நம்மை மெய்சிலிர்க்கவைக்கும். அதற்கு அவர் கூறிய காரணம் வேற லெவல்!
பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளராக கிரேக் சேப்பல் எண்ட்ரி தந்தவுடன் ஃபிட்னஸ் காரணமாக கங்குலி அணியிலிருந்து நீக்கப்பட்டார். பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தந்த கங்குலிக்கே மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க போராட வேண்டிய சூழல் உருவாகியது.
அதன்பின், கடந்த 2007 ஜனவரியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து 97 ரன்களை விளாசினார். ஒருநாள் போட்டியில் கம்பேக் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை அப்போதே நிரூபித்திக்காட்டினார் கங்குலி.
கிரேக் சேப்பல் அணியில் செய்த மாற்றங்களினால்தான் இந்திய அணி 2007 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு நடையைக் கட்டியது. இருப்பினும், அந்தத் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்தவர்களின் வரிசையில் கங்குலி இரண்டாவது இடத்தில் இருந்தார்.
2007-08 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கங்குலி சிறப்பாக விளையாடினாலும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலிருந்து அவர் ஓரம்கட்டப்பட்டார்.
பின்னர் 2008இல் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் தாதா. சத்தமே இல்லாமல் அணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், 2011இல் வர்ணனையாளராக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.
2015 இல் முன்னாள் பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா மறைந்த பிறகு இவர் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி, இவர் போட்டியின்றி பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிசிசிஐ தலைவர் பொறுப்பேற்ற உடனே இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைத்த பெருமையும் இவருக்கே சேரும். இப்படி இந்திய அணிக்கு பல பெருமைகளை சேர்த்த தந்த கங்குலி இன்று (ஜூலை.8) 48 ஆவது பிறந்தநாள் கொண்டாடுகிறார். ஹாப்பி பர்த்டே தாதா!!!