ஃபிட் இந்தியா இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இன்று (செப்.24) நடைபெற்ற காணொலி கூட்டரங்கு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இவ்விழாவில் விராட் கோலி, மிலிந்த் சோமன், ருஜுதா திவேகர், சுவாமி சிவாத்யனம் சரஸ்வதி, முகுல் கனித்கர், தேவேந்திர ஜஜாரியா, அஃப்ஷான் ஆஷிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்காணொலி கூட்டரங்கின் போது பங்கேற்பாளர்கள், உடல்நலம், நல்ல ஆரோக்கியம் குறித்த பிரதமரின் ஆலோசனைகளை கேட்டும், தங்களின் சொந்த அனுபவங்களையும் பகிர்ந்தும் கொண்டனர். இதில் பிரதமருடன் உரையாடிய விராட் கொலி, ‘உடற்தகுதி அடிப்படையில் யோ-யோ(கிரிக்கெட் வீரர் உடற் தகுதித்தேர்வு) சோதனையானது மிகவும் அவசியமான ஒன்று.
உலகளவில் மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் எங்கள் உடற்பயிற்சி நிலைகள் இன்னும் குறைவாகவே உள்ளன. அதேசமயம் யோ-யோ சோதனை அறிமுகப்படுத்தியது நான் தான். ஒருவேளை நான் அச்சோதனையில் தோல்வியைத் தழுவினாலும் அணியில் இடம்பிடிக்க இயலாது. அதனால் நாங்கள் எப்போதும் எங்கள் உடற்தகுதி மீது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறோம். ஆனால் இதற்கு முன்பாக இத்தகைய பயிற்சிகள் இருந்தது கிடையாது’ என்று தெரிவித்தார்.
இறுதியாக கோலியின் உரையைக் கேட்ட பிரதமர், விராட் கோலிக்கும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவிற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து நன்றி கூறி உரையை முடித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020 : கேகேஆர் அணியை வீழ்த்தி மும்பை அசத்தல் வெற்றி!