இந்தியா - தென் ஆப்பிரிக்கா:
டூபிளெசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.
இந்நிலைியல், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
புது ஜோடி:
இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, மயாங்க் அகர்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவது இதுவே முதல்முறையாகும்.
இப்போட்டியின் மூலம், ரோஹித் ஷர்மா முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களமிறங்கினார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இருவரும் எந்த வித பெரிய ஷாட்டுகளை விளையாடாமல் நிதானமான ஆட்டத்தையே கடைப்பிடித்தனர்.
ஏழாவது இந்திய ஜோடி:
அதேசமயம், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் லூஸ் பந்துகளை பவுண்டரிக்கு அடித்து இந்த ஜோடி முதலில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை சேர்த்தது. இதன்மூலம், முதல் இன்னிங்ஸில் முதல்முறையாக ஜோடி சேர்ந்து, முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்த ஏழாவது இந்திய ஜோடி என்ற சாதனையைப் (ரோஹித் ஷர்மா - மயாங்க் அகர்வால்)படைத்துள்ளது.
ஓப்பனிங்கில் சதம் விளாசிய புது இந்திய ஜோடிகளின் விவரம்:
- (மான்காட் - ஃபரூக் இன்ஜினியர்) - 111 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1969,70, கான்பூர்
- (சுனில் கவாஸ்கர் - அருண் லால்) - 156 ரன்கள், இலங்கைக்கு எதிராக, 1982, சென்னை
- (ராகுல் டிராவிட் - சேவாக்) - 410 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக, 2005-06, லாகூர்
- (வாசிம் ஜாஃபர் - தினேஷ் கார்த்திக்) - 153 ரன்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2006-07, கேப் டவுன்
- (முரளி விஜய் - ஷிகர் தவான்) - 289 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2012-13, மொஹாலி
- (கே. எல். ராகுல் - பார்த்திவ் படேல்) - 152 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2016-17, சென்னை
- (மயாங்க் அகர்வால் - ரோஹித் ஷர்மா) - 202* ரன்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, விசாகப்பட்டினம்
ஒன்பது வருடங்களுக்குப் பின் புது சாதனை:
இதற்கு முன்னதாக, 2010 செஞ்சுரியனில் நடைபெற்ற போட்டியில் கவுதம் கம்பிர் - சேவாக் ஜோடிதான் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம்:
இந்திய அணி 59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்களை எடுத்தபோது போதுமான வெளிச்சம் இல்லாததாதல் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரோஹித் ஷர்மா 115 ரன்களுடனும், மயாங்க் அகர்வால் 84 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.