உலகக்கோப்பைத் தொடருக்கு பின் டூ ப்ளஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பெரிதாக சோபிக்கவில்லை.
சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய டெஸ்ட் தொடரின்போது டூ ப்ளஸிஸ் கேப்டன்சி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அப்போதே கேப்டன்சியை விரைவில் கைவிடுவேன் எனக் கூறியிருந்தார்.
இதனிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து டூ ப்ளஸிஸ் நீக்கப்பட்டு டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். நேற்று இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், இன்று தென் ஆப்பிரிக்காவின் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன்சியிலிருந்து விலகுவதாக டூ ப்ளஸிஸ் அறிவித்துள்ளார்.
இதனை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து டூ ப்ளஸிஸ் விடுத்துள்ள அறிக்கையில், ''நான் கேப்டன் பதவியை ஏற்றதுமுதல் அர்ப்பணிப்புடன்தான் செயல்பட்டு வந்தேன். தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் புதிய தலைமையின் கீழ் திரள்கிறது. அதனால் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு நடப்பதுதான் சரியானது.
எனது கேப்டன்சியின் கடைசி காலங்கள் கொஞ்சம் சரியாக அமையவில்லை. புதிய கேப்டனுக்கு அணியின் சீனியர் வீரராக அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்குவேன்'' என்று தெரிவித்துள்ளார்.