கடந்தாண்டு நடந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி, சிறிய அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தானுடன் வெற்றிபெற திணறியது. இந்திய அணியை 230 ரன்களுக்குள் தடுத்தது ஆகட்டும், விரட்டலின்போது இந்திய பந்துவீச்சாளர்களிடம் எளிதாக விக்கெட்டைப் பறிகொடுக்காதது ஆகட்டும், ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவை ஒருவழி செய்துவிட்டது என்றே சொல்லலாம்.
வீரர்கள் தேர்வில் சர்ச்சை, உலகக்கோப்பைத் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாட முடியவில்லை, கேப்டன்கள் மாற்றம், கிரிக்கெட் வாரிய ஊழல் என எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்தில் எவ்வித பின்னடைவும் ஏற்பட்டதில்லை. அதிலும் ஒவ்வொரு தொடரிலும் ஆல்-ரவுண்டர் ரஷீத் கானின் செயல்பாடுகள் முன்னேற்றப் பாதையில் மட்டுமே பயணிக்கின்றன.
அறிமுகமான போட்டி முதல் இன்று வரை சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கும் ரஷீத் கான், விரைவில் டி20 போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் என்ற சாதனையைப் படைக்கக் காத்திருக்கிறார்.
சில நேரங்களில் பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் பேட்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகும். மங்கூஸ், கபூம், அலுமினியம் என சில வித்தியாசமான பேட்களை இதுவரை பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தியிருந்தாலும், 2'கே கிட்ஸ்களுக்கு ரஷீத் கான் பயன்படுத்தும் கேமல் பேட் மீது பிரியம் அதிகமாகவே இருக்கிறது.
ஆனால் ரஷீத் கான் கேமல் பேட் பயன்படுத்தியதற்காக மட்டுமே பிரபலமாகவில்லை. பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் ரசிகரான இவர், அவரது பவுலிங் ஆக்ஷனையும் அப்படியே பின்பற்றினார். ஆனால் அதன் வீரியம் சர்வதேச பேட்ஸ்மேன்களை அதிகமாகவே அசைத்துதான் பார்த்தது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் திடீரென வெளிச்சத்திற்கு வருவார்கள். ஆனால் தனது அறிமுக போட்டியிலிருந்து இன்று வரை கிடைத்த வெளிச்சத்தை தக்கவைத்துக் கொண்டவர் ரஷீத் கான் மட்டுமே.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அந்நாட்டிலுள்ள சூழலின் காரணமாக இந்தியாவில் பயிற்சி மேற்கொண்டுவருகிறது. பயிற்சியின்போது நாம் ரஷீத் கானிடம் நேர்காணல் நடத்தினோம். அப்போது நாம் எழுப்பிய கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:
முதல் போட்டியில் பார்த்த ரஷீத்திற்கும், இப்போதும் பார்க்கும் ரஷீத்திற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. ரஷீத் கான் ஃபிட்னெஸ் ப்ரீக்கா?
நான் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகமான தொடரில் எனது ஃபிட்னஸ் குறித்து கவலைபட்டதில்லை. அதனைத்தொடர்ந்து ஆடிய உலகக்கோப்பைத் தொடரிலும் பங்கேற்றேன். ஆனால் ஐபிஎல், பிபிஎல் உள்ளிட்ட டி20 தொடர்களின்போது பல்வேறு ஜாம்பவான் வீரர்களைப் பார்த்தபோதுதான், கிரிக்கெட்டில் நல்ல வீரராக வலம்வர வேண்டும் என்றால் ஃபிட்னெஸ் மிகவும் முக்கியம் எனத் தெரிந்துகொண்டேன். அதனால் மட்டுமே எனது ஃபிட்னெஸில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். எனது உணவுப் பழக்கம் முதல், உணவு சாப்பிடும் நேரம் வரை அனைத்தையும் மாற்றியுள்ளேன்.
ஹைதராபாத் அணிக்காக ஆடும் நீங்கள், இதுவரை ஹைதராபாத் பிரியாணி பற்றி எங்கேயும் பேசியதில்லையே?
சரிதான். ஹைதராபாத் பிரியாணி மிகவும் பிரபலமான ஒன்று. முதல்முறையாக ஹைதராபாத் அணிக்காக ஆடும்போது ஹைதராபாத் பிரியாணியை ருசித்துள்ளேன். அதன்பிறகு பிரியாணி உண்பதை தவிர்த்துவருகிறேன். ஏனென்றால் எனது ஃபிட்னெஸில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.
உங்களின் ரோல் மாடல்கள்?
கிரிக்கெட்டில் நான் எப்போதும் ஷாகித் அப்ரிடி, அனில் கும்ப்ளே ஆகியோரின் தீவிர ரசிகன். எப்போதும் அவர்களைத்தான் பின்பற்றிவருகிறேன். சிறுவயதிலிருந்தே கால்பந்து மீது அதிக ஆர்வம் இருக்கிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகன் நான்.
கேமல் பேட்டில் என்ன சிறப்பு?
நான் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லை. அதனால் இறுதி நேரத்தில் களமிறங்கி விரைவாக ரன்கள் சேர்க்கும் வேலையைத்தான் எனது அணி என்னிடமிருந்து எதிர்பார்க்கிறது. கவுண்டி கிரிக்கெட் ஆடும்போது ஹிட்டிங்கிற்கு ஏற்றார்போல் கேமல் பேட்டை பயன்படுத்திப் பாருங்கள் என எனது நண்பர் ஒருவர் ஆலோசனை கூறினார். அதையடுத்து பிபிஎல் தொடரில் பயன்படுத்தினேன். எனக்கு உதவியாக இருந்தது. இந்த ஐபிஎல் தொடரிலும் கேமல் பேட்டுடன்தான் களமிறங்க காத்திருக்கிறேன்.
-
#ICYMI - Relive @rashidkhan_19's latest hat-trick here! 😍#BBL09 #OrangeArmy pic.twitter.com/JbgOMf4Ma3
— SunRisers Hyderabad (@SunRisers) January 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#ICYMI - Relive @rashidkhan_19's latest hat-trick here! 😍#BBL09 #OrangeArmy pic.twitter.com/JbgOMf4Ma3
— SunRisers Hyderabad (@SunRisers) January 8, 2020#ICYMI - Relive @rashidkhan_19's latest hat-trick here! 😍#BBL09 #OrangeArmy pic.twitter.com/JbgOMf4Ma3
— SunRisers Hyderabad (@SunRisers) January 8, 2020
இதையும் படிங்க: #EXCLUSIVE: யு15 அணியில் இடம் கிடைக்காதபோது ஏமாற்றமாகவே இருந்தது: குல்தீப் யாதவ்!