2006இல் நாக்பூரில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் இங்கிலாந்து அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மோன்டி பனேசர்.
அப்போட்டியில் சச்சினை அவுட் செய்து தனது முதல் விக்கெட்டை கைப்பற்றிய இவர், 2013இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.இதுவரை இங்கிலாந்து அணிக்காக 50 டெஸ்ட், 26 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள இவர் முறையே 167 விக்கெட்டுகளையும் 24 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
நமது ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த இவர், டி20 உலகக்கோப்பை, ஐபிஎல் தொடர், தோனியின் எதிர்காலம், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி யார் சிறந்த பேட்ஸ்மேன்? ஆகியவை குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பைக்கு பதில் ஐபிஎல்
"என்னைப் பொறுத்தவரையில் டி20 உலக கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடைபெறாது என்று தான் தோன்றுகிறது. நிச்சயம் இந்த தொடர் தள்ளிதான் வைக்கப்படும். அப்படி ஒத்திவைக்கப்பட்டால் டி20 உலகக்கோப்பையை நடத்த திட்டமிடப்பட்டிருந்த அக்டோபர்- நவம்பர் மாதங்களில் பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்தலாம். டி20 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியா அடுத்த ஆண்டும், இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரை அதற்கு அடுத்த ஆண்டும் நடத்திக் கொள்ளலாம்".
கரோனா வைரஸ் காரணமாக வரும் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் திட்டமிட்டபடி டி20 கோப்பை தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தொடர் பெரும்பாலும் தள்ளி வைக்கப்படும் என்ற பேச்சு ஒரு பக்கம் அடிபட்டு வரும் நிலையில் இதுகுறித்த இறுதி முடிவை ஐசிசி அடுத்த மாதம் எடுக்க உள்ளது.
ஐசிசி எடுக்கும் முடிவைப் பொறுத்து பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து தீர்மானிக்கும் எனத் தெரிகிறது.
இங்கிலாந்தை போல இந்தியாவின் நிலைமை சீராகும்
"தற்போதைய சூழலில் இந்தியாவில் கரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்துவது குறித்து பிசிசிஐ பொறுமை காக்க வேண்டும்.
இதற்கு சிறந்த உதாரணமாக இங்கிலாந்துதான் கூறுவேன். ஒரு கட்டத்தில் அதிகமாக இருந்த வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து அடுத்த மாதம் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது
தற்போது வேண்டுமானால் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அளவுக்கு அதிகமாகவே இருக்கலாம். ஆனால் ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் தற்போதைய நிலைமை சீராகும். எனவே பிசிசிஐ ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே நடத்தலாம்".
நடப்பு சீசனுக்கான ஐபிஎல் தொடரை எங்கள் நாட்டில் நடத்திக் கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் வாரியமும், ஐக்கிய அரபு அமீரகமும் பிசிசிஐயிடம் கேட்டுக்கொண்டது நினைவுகூரத்தக்கது.
எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது தோனிக்கு தெரியும்
"நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக விளையாடினால் அவர் தொடர்ந்து டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும். அதற்காக அவர் தன்னை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். தான் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது தோனிக்கு தான் முதலில் தெரியும்".
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தான் தோனி இந்திய அணிக்காக கடைசியாக களமிறங்கினார்.
அந்த தொடரில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததிலிருந்து அவரது ஓய்வு குறித்த பேச்சுக்கள் அதிகம் பேசப்பட்டு வருகிறது. எனினும் இது குறித்து அவர் மௌனம் மட்டுமே காத்து வருகிறார்.
டெஸ்டுக்கு ஸ்டீவ் ஸ்மித், ஒருநாள்,டி20க்கு விராட் கோலி
"என்னைப்பொறுத்தவரையில் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை விட ஸ்டீவ் ஸ்மித் தான் சிறந்த வீரர். ஒருநாள் டி20 போட்டிகளில் விராட் கோலி தான் சிறந்த வீரர்".
தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி இவர்களில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விதான் சமூகவலைதளங்களில் அதிக முறை வலம் வருகிறது. டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், கோலி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.