ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்மித், சரிவர தனது பங்களிப்பை வழங்காததால், அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஸ்மித்தை 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
இதுகுறித்து பேசிய ஸ்மித், “இந்த ஆண்டு டெல்லி அணியில் சேருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் டெல்லி அணி சிறந்த வீரர்கள், பயிற்சியாளர்களைக் கொண்டுள்ளதாக நினைக்கிறேன். உங்களுடன் விளையாட காத்திருக்கிறேன் தோழர்களே” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இறுதி போட்டி வரை முன்னேறியும், கோப்பையை வெல்ல தவறிவிட்டது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக அனுபவ வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 95 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் 2,333 ரன்களை குவித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் ராயல், ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிகளுக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘கோப்பையை வெல்ல மெத்வதேவ் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்’ - ஜோகோவிச்