இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று (செப்.06) சவுதாம்டன் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் டேவிட் வார்னர், அலெக்ஸ் கேரி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் ஃபிஞ்சுடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து, 157 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆரோன் ஃபிஞ்ச் 40 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 35 ரன்களை எடுத்தனர்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 18.2 ஓவர்கள் முடிவில் வெற்றி இலக்கை எட்டியது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
இதையும் படிங்க: முதல் போட்டியில் மும்பை... கடைசி போட்டி பஞ்சாப்... சிஎஸ்கே அணிக்கான அட்டவணை!