தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இதில் முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இதையடுத்து கடந்த டிச.04 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இரண்டு தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அப்போட்டி டிச.06 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் டிச.06 ஆம் தேதி போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஊழியர்களுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததையடுத்து, அப்போட்டி ரத்து செய்யப்பட்டது. பின்னர் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்தன.
இதையடுத்து இங்கிலாந்து வீரர்களுக்கு நேற்று மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று வெளியான பரிசோதனை முடிவில் அணியைச் சேர்ந்த யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இங்கிலாந்து அணியினர் டிச.10ஆம் தேதி தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர்.
இதுகுறித்து இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் அணியைச் சேர்ந்த யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் அறிகுறி இருந்த இரு நபர்களுக்கும் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியினர் வருகிற வியாழக்கிழமை தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பவுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:AUS vs IND : ஸ்வெப்சன் சுழலால் ஆறுதல் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா!