இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் செளதாம்டானிலுள்ள, தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பவுலிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அயர்லாந்து அணி 44.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேம்பர் 59 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி, 30 ரன்கள் விட்டுக்கொடுத்து முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தினார்.
173 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களான ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்த அணியை சாம் பில்லிங்ஸ் தனது நிதானமான பேட்டிங்கின் மூலம் மீட்டார்.
சிறப்பாக விளையாடி அவர் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவருடன் கேப்டன் மோர்கனும் இணைந்து அதிரடி காட்ட 27.5 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
சாம் பில்லிங்ஸ் 67, மோர்கன் 36 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 1) நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: பாண்டிங்கை விட தோனியே சிறந்த கேப்டன் - அஃப்ரிடி!