கரோனா வைரஸால் கடந்த இரண்டு மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. இத்தொற்றால் இங்கிலாந்தில் ஜூலை 1ஆம் தேதி வரை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளை நடத்த இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்கள் பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ளன. பாதுகாப்பான சூழலில் இந்தத் தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் மாற்று வீரர்களுக்கான விதிமுறைகளில் சில தளர்வுகளை கொண்டுவர வேண்டும் என இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
ஐசிசி கடந்தாண்டு நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கன்கஷன் மாற்று வீரர் என்ற புதிய விதிமுறை அறிமுகப்படுத்தியது. அதன்படி, போட்டியில் வீரருக்கு கன்கஷன் ( தலைவலி, மயக்கம்) ஏற்பட்டு விளையாட முடியாத சூழலில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் பேட்டிங், பவுலிங் இரண்டையும் செய்யலாம் என அந்த விதிமுறையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், மற்ற கன்கஷன் தவிர்த்து வீரர்களுக்கு மாற்ற காயங்கள் ஏற்பட்டால் மாற்று வீரர் ஃபீல்டிங் மட்டும்தான் மேற்கொள்ள முடியும் என்றும் விதிமுறையில் குறிப்பிட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த பேச்சுவார்த்தையில் கரோனா வைரஸ் சூழலால் வீரர்களுக்கு எவ்வித காயம் ஏற்பட்டாலும் அதனை கன்கஷனாகவே கருத வேண்டும் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் கூறுகையில், "தற்போதைய சூழலால் இந்த மாற்று வீரர்களுக்கான விதிமுறைகளில் ஐசிசி சில தளர்வுகளை கொண்டுவர வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர்களுக்கு முன்னதாகவே ஐசிசி நிறைவேற்ற வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஃபோர்ப்ஸில் இடம்பிடித்த சோலோ கிரிக்கெட்டர் விராட் கோலி!