உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தமிழ்நாடு, ராஜஸ்தான், பெங்கால், ஜம்மு காஷ்மீர், திரிபுரா, சர்வீசஸ், மத்திய பிரேதசம், குஜராத், பீஹார் உள்ளிட்ட அணிகளுடன் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று தொடங்கிய முதல் போட்டியில் தமிழ்நாடு அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தித் தொடரை வெற்றியுடன் தொடங்கியது. 262 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 48 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக அபிநவ் முகுந்த் 75, பாபா அபராஜித் 52 ரன்களில் ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக் 52 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் என 52 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி, சர்வீஸ் அணியுடன் மோதியது. இதில், டாஸ் வென்ற சர்வீசஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 15 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்து 55 ரன்கள் எடுத்து தடுமாறியது. இந்த இக்கட்டான நிலையில், ஹரி நிஷாந்த் உடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவருடன் சேர்ந்து ஹரி நிஷாந்த்தும் நல்ல கம்பெனி தந்ததால், தமிழ்நாடு அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
இந்த ஜோடி 144 ரன்கள் சேர்த்த நிலையில், ஹரி நிஷாந்த் 72 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில், கேப்டன் என்கிற பொறுப்புடன் அபாரமாக பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் சதம் விளாசுவார் என்று எதிர்பார்த்தபோது 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதில், 8 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இறுதியில், தமிழ்நாடு 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களை குவித்தது.
பின்னர், 295 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த சர்வீசஸ் அணி தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 82 ரன்களுக்கே ஆல் அவுடானது. இதனால், தமிழ்நாடு அணி 212 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றது. தமிழ்நாடு அணி தரப்பில் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக்கோப்பை தொடரில் சொதப்பியபிறகு, இந்தத் தொடரில் விளையாடிவரும் தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஆட்டத்தால் பேட்டிங்கில் கம்பேக் தந்துள்ளார். இவரது பொறுப்பான ஆட்டத்தால் தமிழ்நாடு அணி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ள மற்றொரு லீக் போட்டியில் தமிழ்நாடு அணி, பீஹார் அணியை எதிர்கொள்கிறது.