90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த நட்சத்திர இந்திய வீரர்களில் ஒருவர் இர்பான் பதான். கங்குலி தலைமையின் கீழ் 2003இல் இந்திய அணியில் அறிமுகமானார். பேட்டிங், பவுலிங் என ஆல்ரவுண்டராக திகழ்ந்த இவர், இந்திய அணிக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். குறிப்பாக, 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
ஆஸ்திரேலியாவில் 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி வரலாற்று வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தார்.அதன்பின் உடலில் ஏற்பட்ட காயத்தால் இந்திய அணியிலிருந்து விலகிய இவர், தற்போது வர்ணனையாளராக செயல்பட்டுவருகிறார். அதேசமயம், ஜம்மு காஷ்மீரின் 16 வயது முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகிக்கிறார்.
மேலும், தனது பெயரில் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார். ராஞ்சியிலும் இவரது அகாடமி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் மூலம் ராஞ்சி வீரர் ஷாபாஸ் நதீம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
இப்போட்டியில் வர்ணனையாளராக ஈடுபட்ட இர்பான் பதான், ராஞ்சியில் இயங்கும் சென்டரல் அகாடமி பள்ளியில் தனது கிரிக்கெட் அகாடமிக்கு வருகைத் தந்தார். அப்போது நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தோனியின் ஓய்வு, ஷாபாஸ் நதீமின் ஆட்டத்திறன், தனது கிரிக்கெட் அகாடமி குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தோனியின் முடிவு குறித்து பேசிய அவர், "இது தோனியின் தனிப்பட்ட முடிவாகும். எந்த நேரத்தில் தனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்பதை தோனி தீர்மானிப்பார். ஆனால், அவர் எடுக்கும் முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்" என்றார். இர்பான் பதான் தோனியுடன் சேர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், புனே அணிகளில் விளையாடியிருக்கிறார்.
ஷாபாஸ் நதீம் குறித்து இர்பான் பதான், "ஷாபாஸ் நதீமிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. ஃபீல்டிங், பவுலிங் இவற்றை விட பேட்டிங் ஆடுகளத்தில் இவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் உடையவர். தனது சிறப்பான ஆட்டத்திறனால் இவர் இந்திய அணிக்கு பல வெற்றிகளைத் தேடித்தருவார்" எனத் தெரிவித்தார்.
அகாடமி குறித்து இர்பான் பதான் பேசுகையில், "இந்த அகாடமியில் பயிற்சி பெறும் அனைத்து வீரர்களும் சிறந்த வீரர்களாக உள்ளனர். எதிர்வரும் காலங்களில், இந்த ராஞ்சி அகாடமி நாட்டின் சிறந்த கிரிக்கெட் அகாடமியில் ஒன்றாக இருக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
பேட்டி முடிந்தபிறகு இர்பான் பதான் அகாடமியில் பயிற்சிபெறும் வீரர்களை சந்தித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்திய அணிக்காக இர்பான் பதான் 29 டெஸ்ட், 120 ஒருநாள், 24 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இவர் இதுவரை 301 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 11 அரைசதம், ஒரு சதம் உட்பட 2,821 ரன்களை எடுத்துள்ளார். இந்திய அணிக்காக இவர் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 2012இல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில்தான் இறுதியாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.